அம்பிகையை கொண்டாடுவோம் !

ம்சவள்ளி, எல்லையம்மன், நாக கன்னி, மாரியம்மன், ரேணுகாம்பாள் என்று ஐந்து திருப்பெயர்களுடன் அம்மன் அருளும் திருக்கோயில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் பூசாரி தெருவில் அமைந்துள்ளது. அம்மனுக்கு ஐந்து பெயர்கள் வந்ததன் பின்னணியில் சுவாரஸ்ய மான புராண வரலாறு ஒன்று உள்ளது.
முன்னொரு காலத்தில் ரைவத மகாராஜா என்பவர் தனக்கு மகப்பேறு இல்லாததால், சிவபெருமானை பிரார்த்தித்து தியானம் செய்ய, அவருடைய அருளால் பார்வதியையே மகளாகப் பெற்றார். குழந்தைக்கு ரேணுகாம்பாள் என்றும், அழகாகவும் அம்சமாகவும் இருந்ததால் அம்ச வள்ளி என்றும் பெயரிட்டு, கல்வி கலைகளில் மட்டும் இல்லாமல் போர்க்கலையிலும் பயிற்சி அளித்து வளர்த்து வந்தார். வயது முதிர்ந்த நிலையில் தனக்குப் பின் நாட்டை ஆளுவதற்குத் தகுதியான ஒருவன் தன் பெண்ணுக்குக் கணவனாக வரவேண்டும் என்று நினைத்தார். தந்தையின் எண்ணத்தை அறிந்த ரேணுகாம்பாள், தான் படை எடுத்து ஒவ்வொரு நாடாகச் செல்லுவதாகவும், தன்னை யார் போரில் வெற்றி கொள்கிறாரோ அவரையே தான் மணந்து கொள்வ தாகவும் கூறிவிட்டு, படையெடுத்துச் செல்கிறாள். ஒருவராலும் அவளை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில், ரேணுகாம்பாள் ஒரு காட்டின் வழியே செல்லும்போது, அங்கே ஜமதக்னி முனிவர் தம்முடைய சீடர்களுடன் இருப்பதைக் கண்டு, போருக்கு அழைத்தாள். முனிவரும் தம்முடைய சீடர்களை அனுப்பி வைத்தார். சீடர்களால் அவளை வெல்லமுடியாத நிலையில், ஒரு சீடன் வந்து முனிவரிடம் நிலைமையைச் சொல்ல, அவர் ஒரு தர்ப்பையை மந்திரித்து அவனிடம் கொடுத்து
அனுப்பினார். முனிவரின் மந்திர சக்தியின் காரணமாக ரேணுகாம்பாள் போரில் தோல்வி அடைந்தாள். தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ரேணுகாம்பாள், பெரம்பலூர் எல்லை யில் இருந்த காட்டில் அமர்ந்து கொண்டாள். அதனால் எல்லையம்மன் என்று பெயர் பெற்றாள்.
தம் சீடர்களிடம் போரில் தோற்று ஓடிப்போன ரேணுகாம்பாளைத் தேடி ஜமதக்னி முனிவர் அங்கு வரவே, ரேணுகாம்பாள் ஒரு நாகமாக மாறி புற்றுக்குள் சென்றுவிட்டாள். இதனால் அவள் நாக கன்னி என்றும் பெயர் பெற்றாள். முனிவர் தம் தவ வலிமையால் அவளை புற்றுக்குள் இருந்து
வெளியில் எடுத்து ரேணுகாம்பாளாக மாற்றித் திருமணமும் செய்துகொண்டார். இந்த ரேணுகாம்பாள்தான், அவரின் ஆணைப்படி அவர் மகன் பரசுராமரால் சிரச்சேதம் செய்யப் பட்டவள். தன் சொல்லை மீறாத பரசுராமரைப் பார்த்து, முனிவர் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பரசுராமர் தன் தாய் உயிருடன் வரவேண்டும் என்று கேட்டார். 
முனிவரும் மந்திரித்த தீர்த்தத்தை பரசுராமரிடம் கொடுத்து, தாயின் தலையையும் உடலையும் பொருத்தி தீர்த்தம் தெளித்தால் தாய் உயிருடன் வருவாள் என்று சொன்னார். ஆனால், அவசரத்தில் பரசுராமர் தன் தாயின் தலையை வேறு ஒரு பெண்ணின் உடலில் பொருத்தி விட்டார். அதன் காரணமாக அவளுக்கு மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தக் கோயிலில் சிவனும் பார்வதியும் ஒன்றாக இருப்பது போல், ஆவுடையாரின் மேலாக மாரியம்மனின் தலை உள்ளது. இதுவே இந்தக் கோயிலின் சிறப்பம்சம். மேலும் மரத்தினால் வடிக்கப் பெற்ற மாரியம்மன் சிலையும் கருவறையில் உள்ளது.கருவறைக்கு வெளியில் பரசுராமர், வீரபத்திரர்,
பிள்ளையார், நாககன்னி, ராகு, கேது, மதுரைவீரன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது.
அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாளை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி, மகா சிவராத்திரி ஆகிய தினங்களில் அபிஷேகம் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். ஆடி வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

Comments